சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று முக்கியமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு அளிக்கும் முக்கியத்துவம் தெளிவாகத் தெரியும். அதற்கு இந்த பட்ஜெட் மிகப்பெரிய உதாரணம்!
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் இந்த யூனியன் பட்ஜெட், வெறும் எண்களின் தொகுப்பல்ல; இது தமிழகத்தை இந்தியாவின் தொழில் மற்றும் கலாச்சாரத் தலைநகராக மாற்றுவதற்கான ஒரு தொலைநோக்குப் பார்வை.
பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக விளங்கும் உள்கட்டமைப்பில், தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பல உட்கட்டமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
சென்னை – பெங்களூர் மற்றும் ஹைதராபாத் – சென்னை ஆகிய இரு முக்கிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பயண நேரத்தைக் குறைப்பதோடு, தென்னிந்தியாவின் பொருளாதார மையங்களை இது இணைக்கும். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து நெட்வொர்க்கை இது உருவாக்கும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ₹879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடி ஆட்சியில் இது 9 மடங்கு (9X) உயர்த்தப்பட்டு, சுமார் ₹6,600 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உற்பத்தித் திறனை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன:
கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களில் உள்ள சிறு தொழில்கள் தடையின்றி இயங்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ₹10,000 கோடி மதிப்பிலான சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய செமிகண்டக்டர் மிஷன் (ISM 2.0) மூலம் தமிழகத்தை சிப்-வடிவமைப்பு மற்றும் உற்பத்தியின் மையமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும்.
புதிய ஜவுளிப் பூங்காக்கள் (Textile Parks) அமைப்பதுடன், தேங்காய் மற்றும் முந்திரி உற்பத்தியைப் பெருக்க சிறப்பு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘கடல்சார் மீன்வளத் திட்டத்திற்கு’ (Marine Fisheries) பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றைப் போற்றும் வகையில் கலாச்சாரத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது:
உலகத்தரம் வாய்ந்த ஆன்-சைட் அருங்காட்சியகத்துடன், ஆதிச்சநல்லூர் ஒரு முக்கிய கலாச்சார சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுகிறது.
பழவேற்காடு ஏரியில் பறவைகள் கண்காணிப்புப் பாதை (Bird Trail) மற்றும் கொல்லிமலையில் இயற்கை எழில் மாறாத மலைப்பயணப் பாதை (Hill Trek Trail) ஆகியவை உருவாக்கப்பட உள்ளன. இது உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும்
தெளிவான வேறுபாடு – மத்திய அரசு அள்ளிக்கொடுக்கிறது; திமுக தடுக்கிறது
மத்திய அரசு இவ்வளவு நிதியை ஒதுக்கியும், தமிழகத்தில் அதன் பலன்கள் மக்களைச் சென்றடைவதில் முட்டுக்கட்டைகள் உள்ளன.
“மத்திய அரசு வளர்ச்சிக்கான திட்டங்களை வழங்குகிறது. ஆனால் மாநில அரசு வளர்ச்சி என்ஜினை முடக்குகிறது.”
ரயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், நிலம் கையகப்படுத்துவதில் திமுக அரசு காட்டும் சுணக்கம் காரணமாகப் பல முக்கியத் திட்டங்கள் தாமதமாகின்றன. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் பெண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டங்களுக்கு, திமுக அரசு தனது ‘ஸ்டிக்கரை’ ஒட்டிச் சொந்தம் கொண்டாடுவது வேதனைக்குரியது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த தொழில் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர் இந்த பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர்:
சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், “செமிகண்டக்டர் மிஷன் 2.0 தமிழகத்தை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தும். இது தொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட்.” என்றுள்ளார்.
கோவை தொழிலதிபர் ஒருவர் , “₹10,000 கோடி MSME நிதி என்பது சிறு தொழில்களுக்குக் கிடைத்த ஆக்சிஜன். மேக் இன் இந்தியா திட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை இது உயர்த்தும், ” என்றுள்ளார்.
மதுரை & திருநெல்வேலி வர்த்தக சங்கத் தலைவர்கள் “ஆதிச்சநல்லூர் மேம்பாடு முதல் அதிவேக ரயில் வரை, மோடி பட்ஜெட் தமிழகத்தின் பொருளாதாரத்தையும் அடையாளத்தையும் ஒரே நேரத்தில் வலுப்படுத்துகிறது.” என்றுள்ளனர்.
சேலம் & திருச்சியை சேர்ந்த சிறு தொழில் முனைவோர் “ரயில்வே நிதி 9 மடங்கு உயர்ந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. மாநில அரசு நிலம் கையகப்படுத்த ஒத்துழைத்தால், எங்கள் போக்குவரத்துச் செலவு பெருமளவு குறையும்” என்று பட்ஜெட்டை புகழ்ந்து உள்ளனர்








