திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல… இது திடீர் கட்சி…

முன்னாள் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

புதிய கட்சித் தொடங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு,வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் அடங்கிய கட்சிக்கொடியை பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேசியுள்ளார். சசிகலாவின் இந்த வருகை, தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அ.தி.மு.க வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில், சசிகலாவின் புதிய கட்சித் தொடக்கம் குறித்து நாங்குநேரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜனநாயக நாட்டில் யாருடைய விருப்பம் எதுவோ, அதைச் செய்யலாம். திடீர் சாம்பார், திடீர் இட்லி வருவது போல திடீர் கட்சிகள் வரலாம் என்று விமர்சித்தார். அரசியல் கள நிலவரம் குறித்து அவர் மேலும் கூறுகையில், அ.ம.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் 99.9% தொண்டர்கள் தற்போது ஒரு அணியாகத் திரண்டு விட்டோம். மற்றவர்கள் விருப்பம் போலச் செயல்பட இது சுதந்திர நாடு; யார் வேண்டுமானாலும் எதையும் தொடங்கலாம். 35 ஆண்டுகளாகத் தனக்குத் தெரிந்த சில நபர்களின் ‘உண்மை சொரூபம்’ தற்போது தமிழக மக்களுக்குத் தெரிய வந்து கொண்டிருக்கிறது. அம்மாவின் ஆட்சியை அமைப்போம், அம்மாவின் கட்சியை ஒன்றிணைப்போம் என்று கூறியவர்களின் சாயம் தற்போது வெளுத்து வருகிறது என்று சசிகலாவின் கடந்த கால முன்னெடுப்புகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசினார்.

நெல்மணிகள் தோட்டத்தில் விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. பதர்களால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டார். காக்கா, குருவிகள் நெல்மணிகளைச் சிலவற்றைத் கொத்திச் செல்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சீப்பை ஒளித்து வைப்பதன் மூலம் கல்யாணத்தை நிறுத்த முடியாது என்பது போல, அம்மாவின் ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.