23 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை…

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு காட்டு யானை தாக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமேஸ்வர் ஓரான் பேசுகையில், யானைத் தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் இழப்பீட்டை, ஒடிசா மாநிலத்தைப் போல ரூ. 6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “யானை-மனித மோதல் என்பது ஒரு சமூக மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியாக மாறியுள்ளது. யானைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களுக்குச் சுற்றுச்சூழல் மாற்றங்களே முக்கியக் காரணம்” என்று குறிப்பிட்டார். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் முரட்டு யானைகளைக் கட்டுப்படுத்தப் போதுமான பயிற்சி பெற்ற மீட்புக் குழுக்கள் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட முதலமைச்சர், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தமிழகத்திலிருந்து 6 கும்கி யானைகளை வரவழைக்க உள்ளதாக அறிவித்தார்.

தமிழகத்தின் முதுமலை மற்றும் ஆனைமலை முகாம்களில் உள்ள கும்கி யானைகள், மிகவும் சிக்கலான காட்டு யானைகளை அடக்குவதில் உலகப் புகழ்பெற்றவை. ஜார்க்கண்டில் அட்டகாசம் செய்து வரும் முரட்டு யானையைப் பிடிக்க அல்லது மீண்டும் காட்டிற்குள் விரட்ட இந்த 6 கும்கிகளும் பயன்படுத்தப்பட உள்ளன.இந்த நடவடிக்கை மூலம் ஜார்க்கண்ட் கிராம மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் நிலவி வரும் அச்சுறுத்தல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.