2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்த விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர் தேர்வை முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கட்சியின் நிதிக்காக வசூலிக்கப்படும் விருப்ப மனு கட்டண விவரங்களையும் திமுக தலைமை வெளியிட்டுள்ளது. பொதுத் தொகுதி: ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதி: ரூ.15,000திமுகவுக்கு முன்பாகவே தமிழகத்தின் பிற முக்கியக் கட்சிகள் விருப்ப மனுத் தாக்கல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன: அதிமுக ஏற்கனவே விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் தவெக பிப்ரவரி 6 முதல் 14 வரை விருப்ப மனுக்களைப் பெற்றது. தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் விருப்ப மனுத் தாக்கல் நடைபெற்று முடிந்தது.விருப்ப மனுக்கள் ஒருபுறம் பெறப்பட்டாலும், மறுபுறம் பிப்ரவரி 22 முதல் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அதன் பிறகு முழுவீச்சில் தேர்தல் பணிகளில் இறங்க திமுக திட்டமிட்டுள்ளது.தற்போதைய எம்.எல்.ஏ-க்களில் யாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும், புதிய முகங்கள் யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் திமுக உடன்பிறப்புகள் மத்தியில் அதிகரித்துள்ளது..








