டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு உலகளாவிய தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக மாறிவருகிறது.45 நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் CEO-க்கள், 10 ஆயிரம் கோடி மூதலீடு என களைகட்டி வருகிறது இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு. இங்கு நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் பாஷா-வால் . மத்திய அரசின் ‘பாஷினி’திட்டத்தின் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதனை உருவாக்கியுள்ளது.
இது இந்தியாவின் பன்மொழித் தன்மையை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இணைக்கும் ஒரு புரட்சிகரமான முயற்சி என கூறுகிறது மத்திய அரசு. இந்த ‘பாஷா-வால்’ இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளையும், நூற்றுக்கணக்கான வட்டார மொழிகளையும் நிகழ்நேரத்தில் மொழிபெயர்த்துத் தரும் ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் திரை. ஒரு மொழியில் பேசினால், அந்தத் திரையில் உடனடியாக மற்ற 21 மொழிகளிலும் அதன் அர்த்தம் எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தோன்றும்.ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல மொழிகள் பேசப்படும் பிராந்தியங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்தியா உதவ வேண்டும் என மாநாட்டிற்கு வந்துள்ள தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநாட்டில் ஆச்சரியப்படுத்தும் மற்றொரு கண்டுபிடிப்பு ஏஐ கிரிக்கெட் கோச். மாநாட்டு அரங்கில் ஒரு சிறிய கிரிக்கெட் பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, முதலில் பேட்டிங் செய்ய வருபவரின் அடிப்படைத் தகவல்கள் கணினியில் ஏற்றப்படுகின்றன. பந்துவீசும் இயந்திரத்தை ஏஐ கட்டுப்படுத்துகிறது. அது ஒவ்வொரு வீரரின் திறமைக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றியமைக்கும்.
அதிநவீன கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் வீரரின் கால் அசைவு , பேட் சுழற்றும் வேகம் மற்றும் பந்தைத் தாக்கும் விதம் ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன. வீரர் அடித்த ஷாட் அந்தப் பந்துக்குச் சரியானதா அல்லது தவறானதா என்பதை ஏஐ உடனடியாகத் தெரிவிக்கும்… அந்த பந்துதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கும். ஒரு வீரரின் உடலமைப்பை பல பிரேம்களாகப் பிரித்து, பேட்டிங் நுட்பத்தில் எங்கு தவறு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும். ஆட்டம் முடிந்த சில வினாடிகளிலேயே, வீரரின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்த முழுமையான அறிக்கையை ஏஐ உருவாக்கித் தந்துவிடும்.டெல்லி மாநாட்டில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ‘டாடா ஏஐ சகி’ சக்கை போடு போட்டு வருகிறது. கிராமப்புறப் பெண்கள், சுய உதவிக்குழுக்கள் பெண் தொழில்முனைவோருக்காக உருவாக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான ‘தோழி’ என கூறுகின்றனர் இதனை தயாரித்தவர்கள். எழுதப் படிக்கத் தெரியாத பெண்கள் கூட தங்களின் தாய்மொழியில் பேசி தகவல்களைப் பெறலாம். இது குரல் வழி கட்டளைகளுக்கு மிகத் துல்லியமாகப் பதில் அளிக்கும். மகளிருக்கான பிரத்யேக அரசுத் திட்டங்கள், மானியங்கள் மற்றும் கடன் வசதிகள் குறித்த தகவல்களை எளிமையாக விளக்கும். இவை மட்டுமல்லாமல் இன்யா வாய்ஸ்-ஓஎஸ், ஜியோ ஆரோக்கியா மற்றும் ஜியோ சம்ஸ்கிருதி, விவசாயத்திற்கான ஏஐ ட்ரோன்கள், யுபிஐ ஒரே உலகம் போன்றவை பல அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் வளர்ந்த நாட்டு தலைவர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.







