பாமக யாருக்கு சொந்தம்..?

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய பதில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் முன்னதாக அங்கீகரித்திருந்தது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணையில், பாமகவில் பிளவு ஏற்படுவதற்கு முன்பே தங்களிடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணியையே தலைவராக அங்கீகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், உட்கட்சிப் பிரச்சினைக்கு முன்பான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு ராமதாஸ் தரப்பிற்குப் பின்னடைவாகவும், அன்புமணி தரப்பிற்குச் சாதகமாகவும் பார்க்கப்படுகிறது.