டெல்லி: “சீனா அல்ல.. எந்த நாட்டையும் பார்த்து இந்தியா பயப்படாது. ஏனெனில் இது நேருவின் இந்தியா கிடையாது.
மோடியின் இந்தியா” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
“இந்தியா மீது போர் தொடுக்க சீனா முயற்சிக்கிறது. ஆனால், இந்திய அரசு அதை மறைக்க பார்க்கிறது” என்று ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். எனினும், அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அருணாச்சல் எல்லையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனிடையே, நேற்று இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, “இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்நாடு செய்து வருகிறது. ஆனால், இந்திய அரசாங்கமோ அந்த அச்சுறுத்தலை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மேலும், மக்களிடம் இருந்தும் மறைக்க பார்க்கிறது” எனக் கூறினார். ராகுலின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவின் பாதுகாப்பை கேள்விகேட்கும் விதமாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களை குழப்புவதற்கான முயற்சி. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை களங்கப்படுத்தும் விதமாக ராகுல் காந்தியின் பேச்சு உள்ளது. தன் மீது ஊடக வெளிச்சம் படுவதற்காகவும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக இதுபோன்ற பொறுப்பற்ற விமர்சனங்கள் கூறுவதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராக இருப்பதாகவும், ஆனால் அதை மக்களிடம் இருந்து மத்திய அரசு மறைப்பதாகவும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். சீனா அல்ல.. வேறு எந்த நாட்டையும் பார்த்து பயப்படும் இந்தியா இப்போது கிடையாது. இது என்ன உங்கள் பாட்டனார் நேரு தலைமையிலான இந்தியா என நினைத்தீர்களா? நேரு பிரதரமாக இருக்கும் போது தான், இந்தியாவுக்கு சொந்தமான 37,242 சதுர கி.மீ. நிலத்தை சீனா கைப்பற்றியது. இப்போது இருப்பதோ மோடியின் இந்தியா. எந்த நாட்டாலும் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட கைப்பற்ற முடியாது.
சீனாவுடன் ராகுல் காந்திக்கு நெருக்கம் அதிகம் என்பதை அனைவரும் அறிவார்கள். அதனால்தான், அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு கோடிக் கோடியாக பணம் வந்தது. எனவே, மத்திய அரசும் சீனாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார் போலும். சீனாவுடன் நெருக்கமாக இருப்பதால்தான், அடுத்து சீனா என்ன செய்யப் போகிறது என்பது ராகுலுக்கு தெரிந்திருக்கிறது” என ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறினார்.
Leave a Reply