பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா, கடந்த ஜனவரி 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் குண்டம் திருவிழாவையொட்டி, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 31ஆம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு திருத்தேர் திருவீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு முழுவதும் குண்டம் வளர்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக விரதம் இருந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், 40 அடி நீளம் உள்ள தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக தீ குண்டம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தலைமை பூசாரி பூப்பந்து உருட்டி தீ குண்டத்தில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் பயபக்தியுடன் இறங்கி, தங்களது வேண்டுதலை நேர் கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் மதுரை கோவை,திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்









