பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினர்…

சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை முதலே பொங்கல் பண்டிகை களைகட்டியது. வீடுகளில் விடிய, விடிய கோலமிட்ட பெண்கள், அதிகாலையில் வீட்டு வாசலில் பொங்கலிட்டு, அதனை சூரியனுக்கு படையலிட்டு வணங்கினர். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். புதுமணத் தம்பதியர் பலர் தங்கள்குடும்பத்தினருடன் தலைப்பொங்கலை கொண்டாடினர். கோயில்களில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாரம்பரிய உடையணிந்த இளம் தலைமுறையினர் பலர் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்புறப்பட்டுச் சென்றதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. மாலை நேரத்தில் பொழுதுபோக்கு தலங்கள், திரையரங்கங்கள் போன்றவற்றில் மக்கள் கூட்டம்அதிகமாகக் காணப்பட்டது. சென்னையில் பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு வழங்கினர். அதேபோல், மாட்டுப் பொங்கலும் சென்னையில் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாடுகளை அதன் உரிமையாளர்கள் குளிப்பாட்டி, பூ மாலைகள் அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு அலங்கரித்தனர். பின்னர் கற்பூரம்ஏற்றி மாடுகளை வணங்கினர். அதைத் தொடர்ந்து மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, புற்கள்போன்றவற்றை உணவாக அளித்துநன்றி செலுத்தினர். முதல்வர் தொலைபேசி வாழ்த்து: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வரின் குரல் பதிவு அடங்கிய வாழ்த்துச் செய்தி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வந்தது. அதில், பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், நிதி நெருக்கடியான காலகட்டத்திலும் பொங்கல் பரிசாக ரூ.1,000 அடங்கியபொங்கல் தொகுப்பு வழங்கப் பட்டதை குறிப்பிட்டார்.