சென்னை : ”தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:இந்தியாவில், தினசரி 2,500 பேர் புகையிலை பாதிப்புகளால் உயிர் இழக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால், உலகம் முழுதும், ஆண்டுக்கு 20 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.பல்வேறு ஆய்வுகளின்படி, தமிழகத்தின் 31 சதவீதம் ஆண்கள்; 9.3 சதவீதம் பெண்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர். மேலும், 13 முதல் 15 வயது வரையிலான 6.6 சதவீத மாணவர்கள்; 2.9 சதவீத மாணவியரும் புகையிலையை உபயோகிக்கின்றனர். பள்ளி, கல்லுாரிகளில் புகையிலை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வேலுார், தர்மபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலுார், அரியலுார், நாமக்கல், துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.விழுப்புரம், காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், புகையிலை பழக்கத்தை கைவிட ஆலோசனை தரும் மையங்கள் செயல்படுகின்றன. இதன் வாயிலாக, 1.06 லட்சம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, 218 பேர் புகை பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளனர். இதை தவிர, 25 மாவட்டங்களில் புகையிலை பழக்கத்தை கைவிட ஆலோசனை தரும் மையங்கள் இந்தாண்டுகள் நிறுவப்படும். புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்கள் மீதான தடை, மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.புகையிலை, நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், வினியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Leave a Reply