கோவையில் 9 உரக்கடைகள் உரிமம் ரத்து – சிறப்பு பறக்கும் படையினா் அதிரடி..!

கோவையில் உரக் கடைகளில் சிறப்பு பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 9 உரக்கடைகள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்கள் அடங்கிய 12 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், உர உற்பத்தி நிறுவனங்கள், நுண்ணூட்ட கலவை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 273 இடங்களில் கடந்த 5 நாள்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 9 கடைகளில் உர விற்பனை முனையத்தில் உள்ள உரம் இருப்புக்கும், விற்பனை நிலையத்தில் இருந்த உரம் இருப்புக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டது.

இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட 9 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உர விற்பனை நிலையங்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால் உரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி விதிமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது