தனியார் வங்கிகளில் போலியாக பத்திரம் தயாரித்து 88 லட்சம் மோசடி- டாக்குமெண்ட் ரைட்டர் கைது..!

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா, இவரது மகன் முகமது யூசுப் (47). பல ஆண்டுகளாக பத்திர எழுதும் தொழில் செய்து வரும் இவர்கள் பத்திரம் எழுதுவதில் கில்லாடிகளாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2016 இல் கோபியில் காதர் பாஷாவுக்கு சொந்தமான நிலத்தை அடமானமாக வைத்து சிட்டி யூனியன் வங்கி கிளையில் மூன்று கோடி ரூபாயும், எச்டிஎப்சி வங்கியில் 88 லட்ச ரூபாயும் போலி ஆவணம் தயாரித்து கடன் பெற்றுள்ளனர். பல ஆண்டுகளாக கடனை திரும்ப செலுத்த மறுத்ததோடு முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என வங்கி ஊழியர்களை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஊழியர்கள் நடத்திய விசாரணையில் பத்திர எழுத்தர் காதர் பாஷாவும் முகமது யூசுப்பும் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எச்டிஎப்சி வங்கியின் தலைமை அதிகாரி செந்தில்குமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் இருவரும் பத்திரம் எழுதும் யுக்திகளை கையாண்டு பல வங்கிகளில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் முகமது யூசுப்பை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனர்..