கோவை நகை பட்டறையில் பணியாற்றி வந்த வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 8 பேர் மீட்பு..!

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகார் அடிப்படையில், போலீஸ் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் துறை மற்றும் ரயில்வே சைல்ட் லைன் உள்ளிட்ட மாவட்ட அமலாக்க குழுவினர் கோவை பகுதியில் உள்ள நகை பட்டறைகளில் ஆய்வு
மேற்கொண்டனர். அதன்படி, சுக்கிரவார் பேட்டை பகுதியில் செயல்படும் இரண்டு நகைப் பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டதில், எட்டு ஆண் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 8 வட மாநில குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அனைவரும் கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்து அனைவரும் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
இதனிடையே, சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் இருவர் மீதும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொழிலாளர் துறையின் மூலம் நீதிமன்றத்தில் 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.