75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோவையில் வீடுகள், கடைகள்,நிறுவனங்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்த மக்கள்..!!

கோவை:
நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும்,
மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் தேசிய கொடியின் பண்பையும் தேச தலைவர்களின் தியாகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் தேசிய கொடி இலவசமாகவும், குறைந்த விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டது. கடைகளிலும் தேசியக்கொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், கட்சி பிரமுகர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் தேசியக்கொடியை வாங்கி அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மேலும் அவர்கள் வீடுகள் தோறும் கொடியை ஏற்ற அறிவுரை வழங்கினர். சில
கல்லூரி மாணவர்கள் வீடு வீடாக சென்று தேசியக் கொடியை வழங்கினர்.இந்த
விழாவினை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள
மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளிலுள்ள, வணிக
நிறுவனங்களும் இன்று முதல் 15-ந் தேதி வரை தேசியக்கொடியை ஏற்றி மரியாதை
செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடி
ஏற்றப்பட்டது. பின்னர் அதனைப் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டது. தேசியக்
கொடியின் புனிதத் தன்மைக்கு எந்தவித அவமரியாதையும் நிகழாமல்
கையாளப்பட்டது.

தேசியக் கொடியை திறந்தவெளியிலோ, குப்பைத்தொட்டியிலோ, வயல்வெளிகளிலோ
ஏற்றக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. 75-வது சுதந்திர தின அமுதப்
பெருவிழாவை கொண்டாடும் வகையில் பொது மக்கள் அனைவரும் வீடுகள், வணிக
நிறுவனங்களில் தேசியக்கொடியேற்றி சிறப்பித்தனர். இதனால் அனைத்து
இடங்களிலும் தேசியக்கொடி பறக்கிறது. இது அனைவரையும் கவர்ந்து
புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.