75 வது சுதந்திர தினம் : அனைத்து வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுங்கள் – கோவை கலெக்டர் சமீரன் வேண்டுகோள்..!

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுங்கள்.கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றிட தேசிய அளவிலும் மாநில அளவிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றிய பின் அதனை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். தேசிய கொடியின் புனித தன்மையை பேணும் வகையில், எவ்வித அலட்சியமும் அவமரியாதையும் இன்றி கையாள வேண்டும். குறிப்பாக, தேசியக் கொடியை திறந்த வெளியிலோ, குப்பைத் தொட்டியிலோ, வயல் வெளிலோ வீசக் கூடாது.

பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு நல்கி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுமாறு, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.