புதுடெல்லி: முஹர்ரம் தினத்தையொட்டி ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை நினைவுகூரும் நாள் இன்று. சத்தியத்தின் மீதான அசைக்க முடியாத ஈடுபாடு மற்றும் அநீதிக்கு எதிரான போருக்காக அவர் நினைவு கூரப்படுகிறார். சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கும் அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்’ என்று கூறியுள்ளார்.
கர்பாலா போரில் இறைத்தூதர் முஹமது நபியின் பேரன் ஹுசைன்வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் வகையில் இந்த நாளை முஸ்லிம்கள் அனுசரித்து வருகின்றனர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 80-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அதில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘காந்திஜியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று நமது சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்திய அனைவரையும் நாம் நினைவுகூர்வோம்’ என்று கூறியுள்ளார்.
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ல் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆங்கிலேயர்கள் வெளியேறுவதை துரிதப்படுத்தியது. 1947, ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை பெறுவதற்கு வழிகோலியது.
Leave a Reply