கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.64 லட்சம் மோசடி: 4 பெண்கள் உட்பட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையுடன் 72 லட்சம் அபராதம்..!

கோவை ராமநாதபுரம் ,ஓம் சக்தி நகரில் ” ஒயிட் காலர் அசோசியேட்ஸ்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதை  நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். அதன்பிறகு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த நிதி நிறுவனம் நடத்தியவர்கள் மொத்தம் ரூ. 63 லட்சத்து 72 ஆயிரத்து 600 மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்த கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 41 )முருகேசன், லட்சுமி ( வயது 32 )தீபா (வயது 34) விமலா ( வயது 38 )பிரியா ( வயது 46) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது .அப்போது குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர் .அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமார். முருகேசன், லட்சுமி, தீபா ,விமலா, பிரியா ஆகிய 6பேருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 72 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்பபு கூறினார் அதில் 63 லட்சத்து 72 ஆயிரத்து 600 ரூபாயை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி வாதாடினார்..