மலிவு விலையில் வீடு வாங்கி தருவதாக 19 பேரிடம் ரூ.62 லட்சம் மோசடி – கோவை போலி ரியல் எஸ்டேட் அதிபர் கைது..!

கோவை போத்தனூரை சேர்ந்தவர் எல்சன் கே.ஜோ( வயது 30) ஐ. டி. நிறுவன ஊழியர். இவர் சமூக வலைதளத்தில் குறைந்த விலைக்கு வீட்டுமனை விற்பனைக்கு இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலை பார்த்தார். உடனே அவர் உள்ள முகவரியை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஒண்டிப்புதூரை சேர்ந்த அன்பு சந்திரன் ( வயது 35) பங்குதாரர்கள் சரவணகுமார், நாகேந்திரன் மற்றும் ஊழியர்கள் சைனி தாமஸ் பிரேம் நந்தினி ஆகியோரை அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார் . அவர்களிடம் புதிதாக கட்டிய வீட்டுமனை விற்பனைக்கு உள்ளதா? என்று எலிசன் கே ஜோ கேட்டார் . அதற்கு அவர்கள் சூலூர் கண்ணம்பாளையத்தில் குறைந்த விலையில் 31 லட்சத்துக்கு வீடு இருப்பதாக கூறி, நேரில் அழைத்துச் சென்று காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அந்த வீட்டை வாங்க விரும்பிய எல்சன் கே.ஜோ முன்பணமாக ரூ.25 ஆயிரம் கொடுத்தார். சில நாட்கள் கழித்து ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்தை அந்த நிறுவனத்தினரிடம் கொடுத்தார் .அதற்கு ஒரு கிரைய ஒப்பந்தம் தயாரித்துக் கொடுத்தனர். ஆனால் நீண்ட நாட்கள் அவர்கள் வீடு வாங்கி கொடுக்காமலும், பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுகுறித்து எல்சன் கேஜோ கேட்டபோது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்தனர் .

இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி வழக்கு பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரன் என்ற அன்பு சந்திரனை நேற்று கைது செய்தார் மற்றும் பங்குதாரர்கள் ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து போலியான ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி 19 பேரிடம் குறைந்த விலைக்கு வீட்டுமனை இருப்பதாக கூறி 62 லட்சத்து 47 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது..கைது செய்யப்பட்ட போலி ரியல் எஸ்டேட் அதிபர் அன்பு சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..