துருக்கி நாட்டில் நிலநடுக்கத்தால் பலர் இறந்துள்ள நிலையில் அதற்கு நடுவேயும் கூட திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் பல இடிந்து விழுந்ததுடன் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக துருக்கி, சிரியா மீட்பு படைகளுடன் பல வெளிநாட்டு மீட்பு குழுவினரும் களம் இறங்கியுள்ளனர்.
எனினும் நாளுக்கு நாள் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை துருக்கி, சிரியா இரு நாடுகளில் சேர்த்து நிலநடுக்கத்தால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாத கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் ஹதே பகுதியில் ஆஸ்திரியா, ஜெர்மனி நாட்டு படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கு குழு மோதல்கள் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாதுகாப்பு குறைவு நிலவுவதால் ஆஸ்திரியா ராணுவம் மீட்பு நடவடிக்கைகளை அப்பகுதியில் மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Leave a Reply