குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் சோதனையில் டாரஸ்லாரியுடன் 400 மூட்டை அரிசி சிக்கியது- ஆய்வுக்குப் பின் விடுவிப்பு..!

குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் சோதனையில் டாரஸ்லாரியுடன் 400 மூட்டை அரிசி சிக்கியது- ஆய்வுக்குப் பின் விடுவிப்பு..! கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ( குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை) தலைமையில் தமிழக -கேரள எல்லைகளான மீனாட்சிபுரம் கோபாலபுரம், வழுக்கல் ,வாளையார் ஆனைகட்டி ஆகிய சோதனை சாவடிகளில்இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்தது. நேற்று 7-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோயம்புத்தூர் – பாலக்காடு மெயின் ரோடு மதுக்கரை போலீஸ் செக் போஸ்ட் அருகில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக வந்த ஒரு டாரஸ் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சுமார் 50 கிலோ வீதம் 400 மூட்டைகளில் 20 டன் பச்சரிசியும், 5 டன் குருணை அரிசியும் இருந்ததை கைப்பற்றி விசாரணை செய்தபோது அதில் கொண்டுவரப்பட்ட அரிசிகள் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் அரவை மில்லில் இருந்து கேரளாவிற்கு கொண்டு சென்றது தெரியவந்தது, மேற்கண்ட அரிசி மூட்டைகளில் ஒவ்வொன்றிலும் பகுப்பாய்வுக்காக தனித்தனியே அரிசி மாதிரிகளை எடுத்து கோவை மாவட்டம் பூசாரிபாளையத்தில் உள்ள தர கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேற்கண்ட அரிசிகளை பகுப்பாய்வு செய்த அதிகாரிகள் அவை அனைத்தும் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரேஷன் அரிசி இல்லை என சான்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி லாரியையும் ஓட்டுநர் சையது வாசிம் என்பவரையும் நல்ல நிலையில் விடுவிக்கப்பட்டது.