ஏடிஎம்-மில் பணம் மட்டுமல்ல… தங்கம் கூட எடுக்கலாம்- ஹைதராபாத்தில் அறிமுகம்..!

டிஎம் எந்திரத்தில் பணம் மட்டும்தான் இதுவரை வந்து கொண்டிருக்கிறது. ஆனால், முதல்முறையாக, பணத்துக்குப் பதிலாக தங்க நாணயம் வரும் ஏடிஎம் எந்திரம் ஹைதராபாத்தில் நேற்று நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாமல்லா உலகிலேயே தங்க நாணயம் வழங்கும் முதல் ஏடிஎம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஓபன்கியூப் டெக்னாலஜிக் நிறுவனம் இந்த தங்க நாணயம் வழங்கும் ஏடிஎம் எந்திரத்தை நிறுவியுள்ளது.

இதன்படி இந்த ஏடிஎம் எந்திரத்தில் மக்கள் 5 கிலோ வரை தங்க நாணயங்களை தங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் வாங்க முடியும். தங்க நாணயமும், 0.5 கிராம், 10 கிராம், 100 கிராம் தங்க நாணயங்களாக வரும்.

கோல்ட்சிகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரதீப் கூறுகையில் ” கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எங்கள் நிறுவனம் கமாடிட்டி மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டு வருகிறது. ஏடிஎம் மூலம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை எங்கள் சிஇஓ அறிமுகம் செய்யலாம் என்று யோசித்தார், அதை செயல்படுத்தினோம். இதற்காக ஓபன் கியூப் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு செயல்படுத்தினோம்

ஒவ்வொரு ஏடிஎம்மிலும் 5 கிலோவுக்கு தங்க நாணயம் இருப்பு இருக்கும், இதன் மதிப்பு ரூ.3கோடி. ஏடிஎம்களில் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை நாணயம் கிடைக்கும். 0.5 கிராம், ஒரு கிராம், 2 கிராம், 5 கிராம், 10 கிராம், 20 கிராம், 50 கிராம், 100 கிராம்களில் நாணயத்தை பெறலாம். தங்க நகைக்கடையில் நாணயங்களை வாங்குவதற்கு பதிலாக இந்த ஏடிஎம்களில் தங்க நாணயங்களை வாங்கலாம். இந்த தங்க நாணயங்கள் அனைத்தும் 24 கேரட், 999 சான்றிதழ் பெறப்பட்டதால் அச்சம் தேவையில்லை

எந்த விதமான சேதராமும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் தங்கத்தின் முழுமதிப்பையும் பெறமுடியும். இந்த ஏடிஎம்மில் தினசரி தங்க விலையும் வரும் என்பதால் தினசரி சந்தை விலைக்கு ஏற்ப பணம் செலுத்தினால் போதுமானது. தங்க நாணயத்துக்குரிய விலை, வரி ஆகியவை சேர்தது செலுத்த வேண்டும். இந்த ஏடிஎம்மில் இதுவரை 20 பேர் நாணயத்தை வாங்கியுள்ளனர் .

விரைவில் ஹைதராபாத்தில் இதுபோன்று 4 ஏடிஎம்எந்திரங்களை நிறுவ உள்ளோம். ஹைதராபாத் விமானநிலையம், அமர்பீடம், குக்கத்பள்ளி, கரீம்நகர், வாராங்கல் ஆகிய இடங்களிலும் நிறுவப்பட உள்ளது. நாடுமுழுவதும் இதேபோன்று 3ஆயிரம் ஏடிஎம்களை அமைக்க உள்ளோம்.

இந்த ஏடிஎம் எந்திரத்தில் பாதுகாப்புக்காக கேமிரா, அலாரம் ஆகியவை உள்ளன.யாரேனும் ஏடிஎம் எந்திரத்தை சேதப்படுத்த முயன்றால் அலாரம் எழுப்பி, புகைப்படம் எடுத்துவிடும், அதில் உள்ள மென்பொருள் அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பிவிடும்.

ஒருவேளை பணம் எடுக்கப்பட்டு, தங்க நாணயம் வராவிட்டால், அடுத்த 24 மணிநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பணம் கணக்கில் சேர்க்கப்படும். இதற்காக தனியாக வாடிக்கையாளர் சேவை மையம் அமைத்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.