மின்வேலிகள் அமைத்தால் 3 ஆண்டுகள் ஜெயில் – மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை..!

சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசின் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனுமதிஇன்றி மின் வேலிகள் அமைக்கப்படுவதால், பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சட்டத்தில் நேரடி மின்வேலிகள் அமைப்பதற்கு எதிராக கடும் விதிமுறைகள் உள்ளன. விதிகளை மீறி மின்வேலி அமைப்பவர்கள் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில், தமிழ்நாடு அரசு ஈடுபாடு காட்டி வருகிறது. உயர் மின்னழுத்த மின் வேலிகளால், மின்விபத்து ஏற்பட்டு வன விலங்குகள் குறிப்பாக, யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

எனவே, வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கு, மின் வேலிகளை அமைப்பதற்கான தரப்படுத்தப்பட்ட அளவுகோலுடன் கூடிய விதிமுறைகளை நிர்ணயிக்கப்பட்டது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வேலிகள் அமைக்க புதிய கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதில், சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயம். ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது.

நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய, மின்சார வாரியம், வனத்துறை அலுவலர்கள் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டுக்குழுவினர், 15 நாட்களுக்கு ஒருமுறை கள ஆய்வு செய்து, பதிவுப் புத்தகத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளும், இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள BIS தரநிலைகளான BIS-302-2-76 (இந்தியா) விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் குழுவின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளின் தரம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.