அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் IT ரெய்டு… சென்னை, கோவை உட்பட 100 இடங்களில் அதிரடி சோதனை.!!

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள எ.வ வேலுவிற்கு சொந்தமான இடங்கள், பொறியியல் கல்லூரிகளிலும் 100 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திமுகவின் பசையான அமைச்சர்களை குறிவைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஜெகத்ரட்சகனை தொடர்ந்து தற்போது எ.வ. வேலுவை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ஏராளமான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகளிலும், மேலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூரில் தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.3 கார்களில் வந்த அதிகாரிகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் என்பதும் இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவில் அதிகம் பணம் வைத்துள்ளவர்களை குறி வைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவிற்கு சொந்தமான 100 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.