கோவை:
தொழில் நகரமான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் சிறந்து விளங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்ததாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஆடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்தாலும் மக்கள் பலர் தங்க நகைகள் வாங்குதற்கு என தனியாக சிறிது நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
கொரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் மந்தமாக காணப்பட்ட விற்பனை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருந்தது. அக்டோபர் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 23-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 3 நாட்களில் மட்டும் தோராயமாக 1.5 டன் எடையிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் மதிப்பு ரூ.750 கோடி ஆகும். மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மாப்பிள்ளை மோதிரம், பெண்களுக்கான மோதிரங்கள், தோடு உள்ளிட்ட சிறிய வகை தங்க நகைகள் தான் அதிகம். இருப்பினும் இத்தைகய நகைகளை அதிக மக்கள் வாங்கியதால் விற்பனை மிக சிறப்பாக இருந்தது.
தீபாவளி கொண்டாடப்பட்டதால் ஞாயிற்றுகிழமை அனைத்து நகை கடைகளும் இரவு வரை தொடர்ந்த செயல்பட்டது. நகை விற்பனை பொருத்தவரை தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் 10 நாட்கள் வரை தொடர்ந்து வியாபாரம் சிறப்பாக இருக்கும். தற்போது மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி விதித்துள்ளது. பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு 5 சதவீத வரியை குறைத்து 10 சதவீதமாக நடைமுறைபடுத்தினால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் தரும். மகிழச்சி அடைவார்கள் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.