தீபாவளி முடிந்து ஊட்டியில் இருந்து சொந்த ஊர் செல்ல பஸ் நிலையங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

ஊட்டி:
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலம், மாவட்டத்தில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
குறிப்பாக ஊட்டியில் அமைந்திருக்கும் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதனால் வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டிகள், கைடுகள் மகிழ்ச்சி அடைந்தனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர். சுற்றுலா பயணிகளும் அனைத்து இடங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற மக்கள் அங்கு இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பஸ் நிலையம் நிரம்பி வழிந்தது. அனைத்து பஸ்களும் கூட்டம் அலைமோதியதால் பஸ்சுகாக மக்கள் அதிக நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.