கோவை: தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தில் இரண்டு வகையான மின்கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கோவையில் 20 ஆயிரம் நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன.
மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) சார்பில் கோவையில் நேற்று கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கோவை டாடாபாத், மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தொழில் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல் உள்ளிட்டோர் கூறியதாவது: கரோனா பரவல், அதை தொடர்ந்து தற்போது வரை நிலவி வரும் மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் கோவையில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு கண்துடைப்புக்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மின்கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக எல்டிசிடிஎன்ற பிரிவு (112 கேவி) மின்சாரத்தை குறு,சிறு நிறுவனங்கள்பயன்படுத்தி வரும் நிலையில்60 முதல் 70 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளைத் தொடர்ந்து 25 சதவீதமாக இருந்த உச்ச நேர மின் கட்டணம் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எல்டிசிடி பிரிவில் மாதாந்திர நிலைக் கட்டணம் 150 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைஉணர்ந்து உச்ச நேர மின்கட்டணத்தை அரசு முழுமையாக நீக்க வேண்டும். எல்டிசிடி பிரிவில் 112 கேவி வரை முன்பு இருந்ததைப் போன்று நிலைக்கட்டணம் ரூ.35 மட்டும் வசூலிக்க வேண்டும்.
கதவடைப்பு போராட்டத்தில் 25 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை இழந்துள்ளனர். எங்களுடைய நோக்கம் தமிழக அரசுஇப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு வகை மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை, குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முககுமார், தமிழ்நாடு கிரில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, கம்ப்ரசர் உற்பத்தியாளர் கிருத்திகா, சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் நல்லதம்பி, வெட்கிரைண்டர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சவுந்திரகுமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் கூறியதாவது:
தொழில்முனைவோர் யாரும் எதிர்பார்க்காத மின்கட்டண உயர்வை எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. இதனால் கோவையில் உள்ள குறு, சிறுதொழில் நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. வார்ப்பட தொழில்நிறுவனங்கள் தான் அனைத்து தொழில்களுக்கும் ‘தாய்’ என்று அழைக்கப்படுகிறது.
மின்கட்டண உயர்வால் வார்ப்பட தொழில் மட்டுமல்ல கிரைண்டர், பம்ப்செட், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் என பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பலநிரந்தரமாக மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழக அரசு மின்கட்டண உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.