பாஜக நடிகைகள் குறித்து ஆபாச பேச்சு… திமுகவின் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளர் சைதை சாதிக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை சைதை சாதிக்கை கைது செய்ய கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் பங்கேற்ற திமுக விழா நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அந்த கட்சியின் நிர்வாகி சைதை சாதிக் கலந்து கொண்டு பேசும்போது, பாஜகவினரை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பாஜகவிலுள்ள குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கௌதமி ஆகிய 4 பேர் குறித்து தகாத வார்த்தையில் பேசி விமர்சனம் செய்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முகத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். அப்படியே ஹட்ச் டாக்போலவே இருக்கும். அமித்ஷாவைப் பார்த்திருக்கீங்களா, அம்மன் படத்தில் நடிகை சௌந்தர்யாவைக் கொலைசெய்ய வரும் ஜண்டாவைப்போலவே இருப்பார். படத்தில் வரும் கறுப்பு ஜண்டாவும் நல்லது செய்யவில்லை, வெள்ளை ஜண்டாவான அமித் ஷாவும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை” என்று பேசியிருந்தார். பிறகு திடீரென நடிகைகளை பற்றி அவதூறாக பேசியவர், “நீங்க என்னப்பா. வம்புல மாட்டிவிட்டுருவீங்கபோல. என கைதட்டியவர்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே விமர்சனமும் செய்திருந்தார்.

சைதை சாதிக்கின் ஆபாச பேச்சு குறித்து அப்போதே கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பு, ‘பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும்போது, அவர்கள் எந்த மாதிரியான மோசமான சூழலில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆண்கள்தான் தங்களைக் கலைஞரின் சீடர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா?” என்று கேள்வியை கேட்டதுடன், அந்த ட்வீட்டை, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கும் டேக் செய்திருந்தார்.

இதற்கு கனிமொழியும் உடனடியாக பதிலளித்திருந்தார்.. பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக கனிமொழி எம்பி அந்த டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை சகித்துக்கொள்ளவே முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலினும் திமுகவினரும் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். எனது தலைவர் ஸ்டாலினும், எனது கட்சியினரும் இதை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதால் என்னால் வெளிப்படையாக இதற்கு மன்னிப்பு கேட்க முடிகிறது என்று கனிமொழி பதிவிட்டிருந்தார். இதற்கு உடனடியாக குஷ்பு நன்றி தெரிவித்திருந்தார்.

உங்களது நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன் எனவும் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கிறீர்கள் என பதிவிட்டார். இந்த இரு பெண்களின் நேர்மையான அணுகுமுறையும், ஒருவரையொருவர், நாகரீக பாணியில் பதிலளித்த விதமும், மக்களை கவனிக்க வைத்தன. தமிழக மக்களை ஈர்க்கவும் செய்தன. சைதை சாதிக் பேசியதற்கு, கனிமொழி இப்படி வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமே கிடையாது.

ஆனாலும் தன்னுடைய கட்சிக்காரர் இப்படி பேசிவிட்டார் என்பதற்காக தார்மீக ரீதியாக பொறுப்பை எடுத்துக்கொண்டு, தவறு என்றும் சொல்லி கனிமொழி மன்னிப்பும் கேட்டிருந்தார். இதனிடையே, சைதை சாதிக் ஆபாசமாக பேசியது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.