மரணம் அடைந்த ஆயுள் தண்டனை கைதி அபுதாகிர் உடல் அடக்கம் – பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு..

கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் ( வயது 42) இவர் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையானவர். இதையடுத்து மதுரையில் நடந்த சிறை அதிகாரி கொலை வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் கடந்த 14 ஆண்டுகளாக முடக்குவாதம் மற்றும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு சிறைத் துறை சார்பில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் அபுதாகிர் உடல்நிலையை கருதி ஐகோர்ட் உத்தரவின் பேரில் அவருக்கு நிரந்தர பரோல் வழங்கப்பட்டது .இதனால் அவர் வீட்டில் தங்கி இருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.ஆனாலும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. எனவே கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபுதாகிர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை அவர் இறந்தார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மதியம் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் இருந்து அபுதாகீர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது கோட்டைமேடு வின்சென்ட் ரோடு ,குட் ஷட் ரோடு வழியாக பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் பள்ளிவாசல் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அபுதாகிர் உடல் ஆம்புலன்சில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்தனர். கோவையில் பதட்டமான சூழ்நிலை ஏற்படாது தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.திருச்சி தேனி திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது வருகிற 14-ஆம் தேதி கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தினம் என்பதாலும் ,ஆயுள் தண்டனை கைதி பரோலில் இருக்கும்போது உயிரிழந்த காரணத்தால் அசம்பாவிதங்கள் ஏற்படுவது தடுக்கவும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் சந்தேகத்துக்கு உரிய நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவையில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.இவர் அவர் கூறினார்.