ரூ.200 கோடியில் சர்வதேச தரத்தில் ‘ஸ்மார்ட்’ மாநகராட்சி பள்ளிகள்..!

சென்னை: மாணவர் சேர்க்கையை பல மடங்கு அதிகரிக்கும் வகையிலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்திற்கு மாற்றும் நடவடிக்கையிலும், 200 கோடி ரூபாய் செலவில் 28 பள்ளிகளில் மேம்படுத்துதல் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.சென்னை மாநகராட்சியின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 1.12 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.தற்போது ‘சிட்டிஸ்’ மற்றும் ‘சிங்காரச் சென்னை – 2.0’ ஆகிய திட்டங்களின் கீழ், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதில், ‘சிட்டிஸ்’ என்ற திட்டத்தின் கீழ் 28 பள்ளிகளில் 200 கோடி ரூபாய் செலவில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை உருவாக்குதல், பள்ளியில் உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்துதல், புதிய கட்டடங்கள் கட்டுதல், இணையதள வசதியுடன் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள், பள்ளி முழுதும் ‘வை – பை’ வசதி, ‘வெஸ்டன் டாய்லெட்’ வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.சமையலறையும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ‘டைனிங்’ வசதியுடன் நவீனப்படுத்தப்பட உள்ளது. மேலும், ‘ஹைடெக்’ ஆய்வகங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களும் பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளன.

இது குறித்து ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம் கூறியதாவது: வண்ணாரப்பேட்டை, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி 3.83 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பறைகளிலும் தரமான மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி நுழைவாயில் அழகுற, அனைவரையும் கவரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையிலும், அனைத்து மாநிலங்களின் சிறப்புகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் வகுப்பறைகள் முழுதும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்கான அனைத்து பணிகளையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பள்ளியில் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், விரைவில் மாணவர்கள் பயன்பாட்டிற்கும் திறக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.