கோவை சாலையோரங்களில் யாசகம் பெற்ற 20 பேர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு – கடத்தில் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..!

கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் பெண்கள் மற்று முதியவர்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர். இதனால் சில நேரங்களில் சிக்னல்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தது.
இதனை தடுக்க கோவை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது சிக்னல்களில் யாசகம் பெறுபவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோரை மீட்டனர். இன்று ஒரே நாளில் சுமார் 20 பேரை மீட்ட போலீசார் அவர்களை கோவையில் உள்ள காப்பகங்களில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிக்னல்களில் யாசகம் பெறுபவர்களையும், சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களையும் மீட்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று மாநகரப் பகுதிகளில் ரோந்து சென்றோம். தற்போது வரை 20 பேர் வரை மீட்டுள்ளோம். தொடர்ந்து மாநகரம் முழுவதும் ரோந்து சென்று யாசகம் பெறுபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.