போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பியோட்டம்-போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை.!!

சென்னை, திருவெற்காட்டை அடுத்த மேல் அயனம்பாக்கம், பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் வைத்து நடத்தி வருகிறார்.

இதில் குடி பழக்கம் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள், மறு வாழ்வு மையத்தில் இருந்த ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இமானுவேல் உள்ளிட்டோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தப்பியோடியவர்களில் 8 பேர் போதை மறுவாழ்வு மையத்திற்கு மீண்டும் வந்தனர். தப்பியோடியவர்களில் எஞ்சியிருக்கும் மேலும் 9 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களை, மையத்தில் சிகிச்சை அளித்தவர்கள் தாக்கியதால் தப்பி சென்றார்களா? அல்லது அவர்கள் அங்கிருந்து சென்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.