ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு அவரைத் தப்பிக்க விட்டுவிட்டதாகத் தமிழக அமைச்சர்கள் ஆதவ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர்.
அதேபோன்று தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவும், அப்போதைய திமுக அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‘ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து கருத்து தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் ஆர்ஜூனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்குத் தடை விதிக்க வேண்டும். அவர்களின் இத்தகைய போக்கு திமுகவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். மேலும், உண்மை நிலைக்கு மாறாக திமுகவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களும், ஆளுங்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினரும் அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘வீரமணி தொடர்பான வழக்கைப் படிக்கும்போது தனது மனம் பதறியது, இந்த, வழக்கு மிகவும் தீவிரமானது. இந்த விவகாரம் குறித்து அரசியல் ரீதியாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அமைச்சர்களுக்கும், திமுக தரப்புக்கும் அறிவுறுத்துமாறு இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி கருத்துகளைத் தெரிவிப்பது, வழக்கின் தீவிரத்தைத் திசைதிருப்புவதற்கு வழிவகுக்கும்’ எனத் தெரிவித்தார். இதனையடுத்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் திங்கட்கிழமைக்கு (28.09.2026) நீதிபதி ஒத்தி வைத்தார்.






