15 லட்சம் வாசகர்கள் … ரூ.18 கோடி விற்பனை… 19 நாட்கள் நடைபெற்ற சென்னை புத்தக காட்சி நிறைவு…!!

சென்னை: சென்னை புத்தக காட்சி நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்த நிலையில், ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 47-வது சென்னை புத்தக காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3-ம் தேதி கோலாகலாமாக தொடங்கியது.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 900 அரங்குகளில் ஏராளமான தனித்துவமான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.

விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். புத்தக காட்சிக்கு ஆர்வத்துடன் வருகை தந்த பொதுமக்கள், புத்தகங்களை வாங்கி செல்வதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த உணவு அரங்குகளில் விதவிதமான உணவுகளையும் உண்டு மகிழ்ந்தனர்.

இவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்த சென்னை புத்தக காட்சி நேற்று நிறைவுபெற்றது. கடைசி நாளையொட்டி காலை முதலே வாசகர்கள் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு வேண்டிய புத்தக்கங்களை ஓட்டமும் நடையுமாக மக்கள் வாங்கி சென்றனர்.

 இந்த ஆண்டு மொத்தம் 19 நாட்கள் சென்னை புத்தக காட்சி நடைபெற்றது. 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்தனர். சுமார் ரூ.18 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. வருகை தந்தவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடைபெற்ற நிறைவு விழாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதிப்பு பணியில் 100 ஆண்டு நிறைவு செய்த கடலங்குடி பதிப்பகத்துக்கும், 100 ஆண்டுகள் நிறைவு செய்த பதிப்பாளர் எம்.ஆர்.எம்.அப்துற்றஹீம் – யுனிவர்சல் பப்ளிஷர்ஸுக்கும் நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து பதிப்பு பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த 10 பதிப்பகங்களுக்கும், 25 ஆண்டுகள் நிறைவு செய்த 22 பதிப்பகங்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

 விழாவில் அவர் பேசும்போது, ‘உலகின் எந்நாட்டுக்கும் சற்றும் குறைவில்லாத படைப்புகளை நம்முன்னோர்கள் வழங்கியுள்ளனர். இவற்றில் பல பொக்கிஷங்கள் அச்சில் ஏறாத ஓலைச் சுவடிகளாகவே இருந்து வருகின்றன.

இந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் பதிப்பாக்கம் செய்யப்பட்டால் இதுவரை கிடைத்த பொக்கிஷங்களை காட்டிலும் சிறந்த பொக்கிஷங்கள் நாட்டுக்கு கிடைக்கும். நமது வாழ்க்கை, சிந்தனையை சிறந்த வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்றால் நல்ல படைப்புகளின் வழி நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன், முனைவர் அருந்தமிழ் யாழினி, தொழிலதிபர் விஜி சந்தோஷம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.