ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் வேறு வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பிய ரூ.14.75 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி- போலீசில் புகார்..!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் டிராவல் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்போது அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பதிலாக தவறுதலாக வேறு வங்கி கணக்கிற்கு ரூ.14.75 லட்சம் சென்றது. இது குறித்து ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து மண்டல மேலாளர் தினேஷ் பை என்பவர் வங்கி கணக்கை ஆய்வு செய்தார்.
அதில் வடமாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ருடோல்ப் என்பவரின் வங்கி கணக்கிற்கு பணம் தவறுதலாக சென்றது தெரியவந்தது. தினேஷ் பை தனது இ-மெயில் முகவரி மூலம் அந்த நிறுவனத்தின் முகவரிக்கு நடந்த விவரத்தை கூறினார்.
பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுகொண்டார். ஓரிரு தினங்களில் வங்கி கணக்கில் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக ருடோல்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் 3 மாதங்களாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
அப்போது தான் அவர் ரூ.14.75 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தினேஷ் பை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஏமாற்றுதல் பிரிவில் ருடோல்ப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.