கோவை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ 6.50 கோடி மதிப்புள்ள 12 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது- 4 பேர் கைது..!

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சார்ஜா, சிங்கப்பூர் ,இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது .நேற்று முன்தினம் அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து இறங்கியது. இந்த விமானத்தில் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் வந்த 18 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் “ஸ்கேனர்” செய்தனர். மேலும் அந்த 18 பயணிகளையும் சோதனை செய்தனர் .அதில் அந்த பயணிகள் பேண்ட் பாக்கெட்,உடைகள், பொருட்கள் மற்றும் மலக்குடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்திருப்பது அதிகாரிகள் கண்டுபிடித்தனர் .அதை அவர்கள் வெளியே எடுத்தனர் .இதில் மொத்தம் 12 கிலோ தங்கம் கடத்தி வந்ததும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6 கோடியே 50 லட்சம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைய டுத்து 12 தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தங்கத்தை கடத்தி வந்தது சென்னை சுரேஷ்குமார் ( வயது 37) கடலூர் சங்கர் ( வயது 29) பரமக்குடி ராம்குமார் ( வயது 35) சேலம் குமாரவேல் (வயது 44) புதுக்கோட்டை முகமது சாலிக் ( வயது 35) உட்பட 18 பேர் என்பது தெரிய வந்தது. இவர்களில் சுரேஷ் குமார், சங்கர், ராம் பிரபு, குமாரவேல் ஆகிய 4 பேரும்
ரூ 1 கோடிக்கு மேல் தங்கம் கடத்தி வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் முகமது சாலிக் என்ற பயணியிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர் தன் கையில் வைத்திருந்த பாஸ்போர்ட்டை கிழித்து வீசினார் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அவரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் .இதில் அவர் எந்தெந்த நாடுகளுக்குச் சென்று வந்தார் என்ற தகவல் இருந்ததால் பயத்தில் பாஸ்போர்ட்டை கிழித்தது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் .பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கோவை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ 6 கோடியே 50 லட்சம் மதிப்புள்ளான 12 கிலோ தங்கம் முதல் முறையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது :-இவர்கள் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒரே நபர் அனுப்பினாரா? அல்லது வெவ்வேறு நபர்கள் மூலமாக தங்கம் கடத்திவரப்பட்டதா ?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.என்றனர்.