தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பள்ளியில் சானிடைசரை குடித்த 10ம் வகுப்பு மாணவிகள்- மருத்துவமனையில் சிசிச்சை..

கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவரது தோழி பட்டணத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இவர்களுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிவில் இவர்கள் 2 பேரும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தனர். குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தங்களது அப்பாக்கள் திட்டுவர் என்பதால் மாணவிகள் பயந்தனர். இதனால் வீட்டில் சொல்லாமல் பயத்தில் இருந்தனர்.
குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவிகள் 2 பேரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் வீட்டில் இருந்து சானிடைசரை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் வைத்து குடிநீரில் கலந்து குடித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர 2 பேரும் வாந்தி எடுத்தனர். இதனை பார்த்த ஆசிரியர்கள் என்னவென்று கேட்டனர். அதற்கு மாணவிகள் சானிடைசரை குடித்தாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவிகள் 2 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.