1000 ஆண்டு பழமையான ‘தவ்வை’ கண்டெடுப்பு..!!

துரை: மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தில் விநாயகர் கோயில் அருகே 1000 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலையை ‘மதுரை பாண்டியர்கள் தேடி’ பயண குழுவின் தொல்லியல் ஆய்வாளர்கள் மதன், மணிகண்டன், அறிவுசெல்வம், தேவி கண்டுபிடித்தனர்.

அவர்கள் கூறியதாவது: தவ்வை தமிழகத்தில் கி.பி. 7ம் நுாற்றாண்டு முதல் 10ம் நுாற்றாண்டு வரை வழிபட்ட தாய் தெய்வம். ஜேஷ்டா தேவி, மூதேவி, அலட்சுமி என்றும் அழைக்கப்படுவர். இவர் லட்சுமி தேவியின் மூத்த சகோதரி.

தவ்வையை மூலவராக கொண்ட கோயில்கள் தமிழகத்தில் இல்லை. தனியாகவும், மகன், மகளுடனும் ஒரே பீடத்தில் அமைத்து வழிபட்டுள்ளனர். சில இடங்களில் விவசாய நிலங்களில் சிலையை வைத்துள்ளனர்.

செல்லப்பனேந்தலில் 2 அடி உயரம் 3.5 அடி நீளபலகை கல்லில் தவ்வை தன்மகன் ‘மாந்தன்’, மகள் ‘மாந்தி’யுடன் அமர்ந்த நிலையில் உள்ளார். முகம் முற்கால பாண்டியர் கால பாணியில் உள்ளது.

இந்த தவ்வை சுகாசனத்தில் வலது கையில் மலர் பிடித்து, இடது கையை தன் தொடையில் வைத்து, பின் கொண்டையுடன் அமர்ந்துள்ளார்.முழு ஆடை உடுத்தி கீழே பார்த்தபடி உள்ளார்.

வலதுபுறம் மகன் மாந்தன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். கை சிதைந்துள்ளதால் அதுகுறித்த குறிப்புகளை அறிய முடியவில்லை. இடதுபுறம் மகள் மாந்தியும்அமர்ந்த கோலத்தில் கொண்டை, கழுத்து அணிகளுடன், வலது கையில் மலர் பிடித்து, இடது கையை தொடையில் வைத்தும் செதுக்கப்பட்டுள்ளார்.

தவிர, மதுரை தெற்குமாசி வீதி தென்னோலைக்காரத் தெருவேப்ப மரத்தடியில் குன்று கல்லில் 16ம் நுாற்றாண்டின் நடுகல் வீரர் சிலையை எங்கள் குழுவைச் சேர்ந்த முனிராஜ் குணா கண்டுபிடித்தார். இந்த சிலை முத்துகருப்பசாமி என்ற காவல் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இவ்வாறு கூறினர்.