இளம் பெண்ணை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற துணிக்கடை ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை :தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் அன்புவேல் (வயது 33)இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே துணிக்கடையில் 24 வயது பெண் ஒருவர் காசாளராக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி இரவு 10 – 30 மணி அளவில் காசாளரான அந்த பெண் கடையில் கணக்குகளை சரிபார்த்து முடித்தார். பின்னர் தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு தனது தந்தைக்கு செல்போனில் தகவல் கூறிவிட்டு கடையின் வெளியே வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது நல்ல மழை பெய்தது .உடனே அன்புவேல் அந்த பெண்ணிடம் மழையில் நனையாமல் இருக்க கடைக்கு உள்ளே வந்து நில்லுங்கள் என்று கூறியுள்ளார் .அதன்படி உள்ளே சென்று நின்றார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அன்புவேல் திடீரென அந்த பெண்ணை கடையின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். காவலாளியை பார்த்ததும் அன்புவேல் தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் அன்பு வேலை கைது செய்து அவர் மீது பாலியல் பலாத்காரம் முயற்சி, தன்னிச்சையாக காயத்தை உண்டாக்குதல், மிரட்டல் ஆகிய 3 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இதில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக அன்புவேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட அன்பு வேலுக்கு 376/511சட்ட பிரிவின்படி 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 ஆயிரம் அபராதமும் 324 மற்றும் 506 சட்டப்படி தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். .பின்னர் அன்பு வேலை போலீசார் பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.