ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி 10 கோடி மோசடி- உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

திருப்பூர் மாவட்டம் பொன்கோவில் நகரில் ஜோதிவேல் ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனராக அமுல் என்பவர் செயல்பட்டு வந்தார். இந்த பண்ணையில் முதலீடு செய்தால் இரண்டு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் திட்டத்தில் ரூபாய் 1 லட்சத்து முதலீடு செய்தால் அவர்களே செட்டு போட்டு, 300 கோழிக் குஞ்சுகள், தீவனங்களை கொடுத்து மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரம் 24 மாதத்திற்கு கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் 24 மாதம் முடிந்ததும் முதலீடு செய்த தொகை திரும்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இரண்டாவது திட்டத்தில் ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம்தோறும் ரூபாய் 11,000 கொடுப்பதாகவும், 24 மாதத்திற்கு பின்னர் முதலீடு செய்த தொகை திரும்பி கொடுப்பதாகவும், அறிவிக்கப்பட்டது. இதை நம்பி ஏராளமானோர் இந்த பண்ணையில் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்காமலும், முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்துள்ளனர். இதுகுறித்து கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அமுல் மொத்தம் 524 பேரிடம் இருந்து ரூபாய் 10 கோடியே 3 லட்சத்து 66 ஆயிரத்து 690 மோசடி செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அமுலை கைது செய்தனர். அத்துடன் இது தொடர்பாக கோவையில் உள்ள டான்பிட் (தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம்) கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்ககு 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் போலீசார் தரப்பில் அறிக்கை சம்ர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு சாட்சி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஜோதிவேல் ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர் அமுல் என்பவருக்கு 10 சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி 25 லட்சத்தி 8 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். மேலும் அபராதம் தொகை அவர் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.