0 டிகிரி செல்சியஸ்… உறைபணியில் உருகும் நீலகிரி… .ஜில்லென்று மாறிய ஊட்டி.!!

 நீலகிரி மாவட்டத்தில் உறைபனியால் மூடப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் இன்று காலை 0 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.

தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ். நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் குளிர் சீசன் தொடங்கும் . கடந்த ஆண்டில் இயல்பான குளிரில் இருந்து வந்த நீலகிரியில் சுமார் 75 நாட்கள் தாமதமாக சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. அதற்கேற்ப இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது அதிகாலையில் பல பகுதிகளில் 0 டிகிரியாக பதிவாகியுள்ளது. அதிகாலை நேரங்களில் நிலப்பரப்பிற்கு மேல் படியும் நீர்த்துளிகள் பனித்துகள்களாக காணப்படுவதால் உறைபனியாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் மற்றும் புல்வெளிகள் மீது உறை பனி படிந்துள்ளதால் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல உள்ளது.

அப்பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் காலை 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உறை பனியின் தாக்கம் மிக அதிகமாக இருந்த நிலையில் இன்று அவலாஞ்சி பகுதியில் 0 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.