மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை – தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 82 மி.மீ. மழை பெய்திருந்து. இதுபோல் மாஞ்சோலையில் 37 மி.மீ, காக்காச்சியில் 66, ஊத்து பகுதியில் 77 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அம்பாசமுத்திரம்- 14, சேரன் மகாதேவி- 3, மணிமுத்தாறு- 12, நாங்குநேரி- 4.80, பாளைய ங்கோட்டை- 3.20, பாபநாசம்- 30, ராதாபுரம்- 12, திருநெல்வேலி- 2.60, சேர்வலாறு அணை- 21, கன்னடியன் அணைக்கட்டு- 14.80, களக்காடு- 2.80, கொடுமுடியாறு- 19, மூலைக்கரைப் பட்டி- 3, நம்பியாறு – 21 என, மொத்தமாக மாவட்டத்தில் ஒரே நாளில் 425 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் நீடிக்கும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,358 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,728 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாபநாசம் அணையிலிருந்து 2,547 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 1,520 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

இந்த இரு அணைகளில் இருந்தும் 4 ஆயிரம் கன அடிக்கு மேல் தாமிரபரணியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் பாயந்தோடுகிறது. திருநெல்வேலியில் குறுக்குத் துறை முருகன் கோயில் மண்டபங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றங்கரையோர மண்டபங்களும் தண்ணீரில் மூழ்கியிருந்தன.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணை யில் 16 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 8 மி.மீ., கருப்பாநதி அணையில் 7.50 மி.மீ., ராமநதி அணையில் 7 மி.மீ., குண்டாறு அணையில் 6 மி.மீ., சிவகிரியில் 5 மி.மீ., சங்கரன்கோவில், ஆய்க்குடியில் தலா 4 மி.மீ., செங்கோட்டையில் 2.80 மி.மீ. மழை பதிவானது. நேற்று மதியம் சில இடங்களில் லேசான மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப் பெருக்கு காரணமாக பிரதான அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.