சுனாமி பீதியில் பொதுமக்கள்: ராமேஸ்வரத்தில் கடல் 500 மீட்டர் முதல் 1 கிமீ வரை கடல் உள்வாங்கியது…

ஜப்பான், சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதன் காரணமாகக் கடந்த 3 நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை முதல் ராமேஸ்வரம் பாம்பன் சின்னப்பாலம், தோப்புக்காடு முந்தல்முனை, தரவைதோப்பு பகுதிகளில் கடல் 500 மீட்டர் முதல் 1 கிமீ வரை கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்கள், கடல் பாசிகள் வெளியில் தெரிந்தன. ராமேஸ்வரத்தில் கடந்த சில வருடங்களாக இந்நிகழ்வு அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்கள் ஏற்கனவே படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்றுள்ளனர். சுனாமிக்குப் பிறகு இப்பகுதிகளீல் கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றம் அடிக்கடி நிகழ்வுகளாகி வருகின்றன. இச்சம்பவம் பாரம்பரிய மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றுள்ளன. கடல் உள்வாங்கியதால் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப் பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.