பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு: பேராசிரியர்கள் உள்ளிட்ட 5 பேரிடம் போலீஸார் விசாரணை…

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் (66), பதிவாளர் (பொ) தங்கவேல் (60),கணினி துறை இணைப் பேராசிரியர் சதீஷ்குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து, அரசு அனுமதியின்றி `பூட்டர் அறக்கட்டளை’ என்ற பெயரில் கல்வி நிறுவனம், `அப்டெக்கான் ஃபோரம்’ என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய கருப்பூர் போலீஸார், துணைவேந்தர் உள்ளிட்ட 4 பேர் மீதும்8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கடந்த 26-ம் தேதி கைதுசெய்தனர். பின்னர் அவர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, பெரியார் பல்கலை.பொருளாதாரத் துறை தலைவர் ஜெயராமன், மேலாண்மை கல்வி நிறுவன பேராசிரியர் சுப்பிரமணிய பாரதி, விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் நரேஷ்குமார், உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் விருந்தினர் மாளிகை ஊழியர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து கருப்பூர் காவல் நிலையத்துக்கு ஜெயராமன் உள்ளிட்ட 5 பேரும் நேற்று வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.