ஓபிஎஸ்: பிரதமர் மோடிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி…

காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில், 2024 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முத்தையால் பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ஓபிஎஸ் க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ்-க்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் 25 லட்சம் ரூபாய் கழக நிதி வழங்கினார். விழாவில் சிறப்புரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், “ஜெயலலிதா எனக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார். ஆனால் கட்சி உடைந்து விடக்கூடாது என்று நான் எடுத்த முடிவிற்கு, துணை முதலமைச்சர் பதவி நான் வேண்டாம் என கூறினேன். அது டம்மி பதவி அதிகாரம் இல்லாத பதவி. என்னை கட்டாய படுத்தி அந்த பதவி கொடுத்தார்கள்.

இரட்டை இலை வழக்கு தற்காலிகமாக தான் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த மாதம் 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்பொழுது நாம் தான் வெற்றி பெறுவோம் . நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தொடர்வதற்கு முழு ஆதரவாக இருந்தவர் பிரதமர் மோடி. அவரை அழைத்து பிரதமர் மோடி தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என தெரிவித்த அடுத்த வாரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அப்படிப்பட்ட துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சனம் செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர், “ கிளாம்பாக்கத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் 90 சதவீதம் பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டன அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாட்டை நாளை யார் ஆளப்போவது என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல். மாண்புமிகு பாரத பிரதமர் 10 ஆண்டு காலம் ஆட்சி சிறப்பாக இருந்தது அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கூட நரேந்திர மோடி தான் பாரதப் பிரதமராக வரவேண்டும்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “உறுதியாக நாங்கள் கூறிய நிதியை பொங்கல் தொகுப்பு அரசு வழங்க வேண்டும் இல்லை என்றால் அதைக் கொடுக்கிற வரைக்கும் எங்களுடைய கோரிக்கை வலுவாக இருக்கும். டெல்லியில் ஆளுகின்ற நிலை தேசிய கட்சிகளுக்கு தான் இருக்கிறது ஆகவே நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரையிலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தான் கூட்டணி அமையும்” என்றார். அப்போது அவரிடம், ரகசியங்கள் வெளியே சொல்ல வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ”பொறுத்திருந்து பாருங்கள்” என ஓபிஎஸ் கூறினார்.