இந்தியா இந்துக்கள் நாடு தான்.. ஆ.ராசாவின் அவதூறு பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்.!

ந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியுள்ள வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்துக்கள் யார்? என்பது குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டித்து பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட ஆ.ராசா சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என்று பேசியிருந்தார்.

ஆ.ராசாவின் கருத்துகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆ.ராசாவின் கருத்தை கண்டிப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “இந்தியா இந்துக்கள் நாடு. இந்து மதம் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா கூறிய கருத்துகள் ஏற்புடையது அல்ல. தேமுதிக என்றுமே ஒரு சாதி, மத பாகுபாடு இன்றி மக்களின் நன்மைக்காக செயல்படும், அதற்காகவே உருவாக்கப்பட்ட கட்சி” என்று கூறியுள்ளார்.