ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக 4 பிரிவாக அதிமுக பிளவு பட்டுள்ளது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவருகின்றனர். இருவரும் சட்டப்போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் உச்சநீதி மன்ற உத்தரவு படி எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளருக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, இரட்டை இலை சின்னம் வெற்றிபெற, அதிமுகவின் தொண்டர்கள் உழைக்கிறார்கள், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார். அவர் மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், கேபி முனுசாமிக்கு எதிரான கருத்துகளை கூறிவருகின்றனர். நேற்று ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட என்னிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்றும் கே.பி.முனுசாமி கூறியதாக தெரிவித்தார்.
என்னைப்போல் பலர் பணம் கொடுத்து கே.பி.முனுசாமியிடம் ஏமாந்துள்ளதாக தெரிவித்தார். அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். சீசனுக்கு எற்றார் போல் வியாபாரம் செய்யும் கே.பி.முனுசாமி வாயை மூடவில்லை என்றால் அடுத்த இரண்டு நாட்களில் வீடியோ ரிலீஸ் செய்வேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக பேசினால் இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என எச்சரித்தார்.
இந்த ஆடியோ விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான். ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர். ஆடியோ வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லையென தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிட்டேன், தேர்தல் செலவுக்காக கட்சி சார்பாக வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. எனக்கு பணம் வழங்கவில்லை எனவே தான் தெரிந்தவர்களிடம் பண உதவி கேட்டேன். அந்த வகையில் தான் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் 1 கோடி ரூபாய் கடனாக கேட்டதாக கூறினார். இந்த ஆடியோவை கிருஷ்ணமூர்த்தி திரித்து வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்.
Leave a Reply