நூல் விலை கடும் சரிவு… ஸ்பின்னிங் மில்களில் நூல் மூட்டைகள் தேக்கம்: திணறும் உரிமையாளர்கள்-உற்பத்தி நிறுத்தம்..!!

அன்னூர்: நூல் விற்பனை விலை சரிவால் ஸ்பின்னிங் மில்கள் திணறுகின்றன. நூற்றுக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.அன்னூர் தாலுகாவில், கரியாம்பாளையம், கணேசபுரம், தெலுங்குபாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், கெம்பநாயக்கன்பாளையம், கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 125 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 3,000 ஸ்பிண்டில் திறன் முதல் 50,000 ஸ்பிண்டில் திறன் வரை உள்ள இந்த மில்களில், உள்ளூர் தொழிலாளர்கள், வெளி மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.தமிழகத்தில் போதுமான பருத்தி விளைச்சல் இல்லாததால், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து அன்னூர் தாலுகாவில் உள்ள ஸ்பின்னிங் மில்கள் பயன்படுத்துகின்றன. இங்கு உற்பத்தியாகும் நூல் சோமனூர், திருப்பூர், ஈரோடு, கரூர், ஈச்சல் கரஞ்சி, குஜராத் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் மட்டும் 11 ஆயிரம் பேர் அன்னூர் தாலுகாவில் ஸ்பின்னிங் மில்களில் பணிபுரிந்து வருகின்றனர்.இது குறித்து ஸ்பின்னிங் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:ஒரு மாதத்திற்கு முன்பு வரை பஞ்சு விலை வரலாறு காணாத அளவு 356 கிலோ கொண்ட கண்டி ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. தற்போது ஒரு கண்டி 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆனால் நூல் விலை கடும் சரிவில் உள்ளது. நேற்று பின்னலாடைக்கு பயன்படுத்தப்படும் நூல் 50 கிலோ மூட்டைக்கு 2000 ரூபாய் குறைந்துள்ளது.60ம் எண் நூல், 50 கிலோ மூட்டை 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 40 ம் எண் நூல் 50 கிலோ மூட்டை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தற்போதைய பஞ்சின் விலை, மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம், வங்கி வட்டி ஆகியவற்றை கணக்கிட்டால் தினமும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.மேலும் கடந்த சில நாட்களாக நூலுக்கு அதிக தேவையில்லை.

எனவே, அன்னூர் தாலுகாவில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நூல் மூட்டைகள் ஸ்பின்னிங் மில்களில் தேங்கி கிடக்கிறது.சில ஸ்பின்னிங் மில்கள், பணம் வேண்டும் என்பதனால் மேலும் நூல் விலையை குறைத்து விற்று வருகின்றனர்.பஞ்சு ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும், இறக்குமதிக்கு முழுமையாக வரி ரத்து செய்ய வேண்டும். நூல் ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். பருத்தி பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஊக்க தொகை அளிக்க வேண்டும். வங்கி கடனுக்கான வட்டி வசூலை ஒத்தி வைக்க வேண்டும்.பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ஜவுளி தொழிலை மீட்க வேண்டும். அன்னூர் தாலுகாவில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலையில்லாததால் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கிறனர்.ஸ்பின்னிங் மில்கள் மூன்று சிப்டுகளும் இயங்கும் போது அழைத்துக் கொள்கிறோம் என நிர்வாகங்கள் கூறிவிட்டன.இவ்வாறு ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.