ஜாக் மா-வை ஒரேடியாய் ஒழித்து கட்டிய ஜி ஜின்பிங்… ஜப்பானில் தஞ்சமடைந்த அலிபாபா..!

டோக்கியோ: சர்வதேச அரங்கில் சீன தொழிற்துறையின் முகமாக இருந்தவர் ஜாக் மா. ஆனால், இப்போது கடந்த சில மாதங்களாகவே அவர் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார்.

அவருக்கு என்ன தான் நடந்தது என்பதைப் பார்க்கலாம்

இந்தியாவைப் போலச் சீனாவில் மக்களாட்சி எதுவும் இல்லை. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், சீனாவில் அதெல்லாம் இல்லை.

அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தான் அதிபர் தேர்வு செய்யப்படுவார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாட்டில் தான் சீனாவை ஆளும் அதிபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடந்த 2012ஆம் ஆண்டு அப்படித்தான் ஜி ஜின்பிங் சீன அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். சீனாவைப் பொறுத்தவரை இதற்கு முன்பு எந்தவொரு தலைவரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தது இல்லை. ஜி ஜின்பிங்கிற்கு முன்பு அதிபராக இருந்த புஹு ஜிண்டாவோ இரண்டு முறை அதிபராக இருந்த பின்னர் விலகியதாலேயே ஜின்பிங்கால் அந்த இடத்திற்கு வர முடிந்தது. இருப்பினும், ஜி ஜின்பிங்கிற்கு இரு முறையுடன் அதிபர் பதவியை விட்டு இறங்கும் எண்ணம் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே அவர் கடந்தாண்டே அதிபர் பதவிக்கு இருந்த கால வரம்பை நீக்கிவிட்டார். இதன் மூலம் இந்தாண்டு மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் அதிபராகத் தேர்வானார்.

அதேபோல ஜி ஜின்பிங் தனக்கு எதிராக யாரும் குரல் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார். கட்சிக்குள் யாராவது தன்னை எதிர்க்க நினைத்தால் அவர்களை ஒழித்துவிடுவார். தன்னுடைய எதிரிகளை ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் ஒதுக்கித் தள்ளிவிட்டார் ஜி ஜின்பிங். கட்சியில் முக்கிய நிர்வாகிகளைத் தனது ஆதரவாளர்களையே நியமித்தார். இதன் மூலம் எதிர்ப்பு எதுவும் எழாமல் பார்த்துக் கொண்டார். தனது அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை அவர் தயவு தாட்சணியமே பார்க்காமல் ஒழித்துக்கட்டி விடுவார்.

அப்படி ஒழித்துக் கட்டப்பட்டவர்களில் ஒருவர் தான் ஜாக் மா.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சர்வதேச அரங்கில் சீன தொழிற்துறையின் முகமாக இருந்தவர் ஜாக் மா. அலிபாபா தொடங்கி அவரது பல்வேறு தொழில்களும் சீனாவில் செம ஹிட். இதற்கு அங்குள்ள ஜின்பிங் அரசு கொடுத்த ஆதரவும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. கடந்த 2020ஆம் ஆண்டு இவரது பேச்சு ஒன்று தான் அத்தனையும் தொடங்கி வைத்தது. சீனாவில் உள்ள ஒழுங்குமுறை அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றவர் வேகமாக வளர பல சீர்திருத்தங்கள் சீனாவுக்குத் தேவை எனக் கூறியிருந்தார்.

அத்துடன் நில்லாமல் சீன வங்கிகள் அடகுக்கடை மனநிலையுடன் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார். இது சீன ஆளும் வர்க்கத்திற்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. குறிப்பாக ஜி ஜின்பிங்கிற்கு. தனக்கு எதிராகக் கருத்துச் சொன்ன ஜாக் மாவை காலி செய்ய வேண்டும் என முடிவெடுத்துவிட்டார். ஜாக் மாவுக்கு எதிராக அனைத்து சீன நிறுவனங்களும் திரும்பின. அவரது டெக் நிறுவனங்கள் மீது வரிசையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உச்சபட்சமாக ஜாக் மா தனது Ant க்ரூப் நிறுவனத்தை மெகா விலைக்குப் பங்குச்சந்தையில் பட்டியலிட இருந்த நிலையில், அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஜாக் மா எங்குச் சென்றார் என்றே தெரியாமல் போனது. எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

சொந்த ரியாலிட்டி ஷோக்களிலும் கூட பங்கேற்கவில்லை. மிகவும் ஏழ்மை நிலையில் பிறந்து உலகின் டாப் தொழிலதிபர்களில் ஒருவராக மாறிய ஜாக் மாவுக்கு இப்படியொரு நிலைமை உண்டானதைப் பலராலும் ஏற்றுக் கொள்ளக் கூட முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிலில் மற்ற நிறுவனங்களை வளர விடாமல் அழிப்பது மோனோபோலி என்று அழைக்கப்படும். சீனாவில் டெக் துறையில் மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பை அளிக்காமல் இருந்ததாக ஜாக் மா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உண்மையில் ஜாக் மா சொன்னதே சீனாவின் கட்டுப்பாடுகள் புதிய நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் இல்லை என்று தான். ஆனால், அதே விஷயத்தை ஜாக் மாவுக்கு எதிராக மாற்றியது ஜி ஜின்பிங் அரசு.

இதனால் வேறு வழியின்றி அவர் சீனாவில் இருந்தும் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது குடும்பத்துடன் சீனாவில் இருந்து வெளியேறிய அவர், கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளாராம். அமெரிக்கா, இஸ்ரேல், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் கடந்த சில மாதங்களில் அவர் காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இப்போது அவர் குடும்பத்துடன் ஜப்பானில் வசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 6 மாதங்களாக அவர் குடும்பத்துடன் டோக்கியோவில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு வகையில் ஜப்பானுக்கும் ரொம்பவே நல்லது தான்.

கொரோனா பரவலுக்குப் பின், ஜப்பான் ரொம்பவே சிரமப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு வரை பொருளாதார வளர்ச்சி அங்குச் சிறப்பாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணமே சுற்றுலாத் துறையாகவே இருந்தது. இப்போது கொரோனா முடிந்துவிட்டாலும் சுற்றுலாத் துறை இன்னும் நார்மலாகவில்லை. இதனால் அங்குப் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் ஜாக் மா மட்டுமின்றி, அவரை போலப் பணக்காரர்களை அழைத்துக் கொள்ள ஜப்பான் தாயாராகவே உள்ளது. பெரும் பணக்காரர்கள் ஓரளவு செலவு செய்தால் அதுவும் கூட தங்கள் பொருளாதாரத்தைக் காக்க உதவும் என்று ஜப்பான் ரொம்பவே நம்புகிறது.