நீட் விலக்கு மசோதா: முதல்வர் ஸ்டாலின் அடுத்த பிளான் இதுதான்..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாக ‘நீட்’ தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கி 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை நாம் இழந்துள்ளோம். நீட் தேர்வுக்காக பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெறுகிறார்கள். இது எல்லா மாணவ, மாணவியராலும் முடியுமா? ஏழைகளால் முடியுமா? முடியாது. அரசு பள்ளியில் படிப்பவர்களால் முடியுமா? முடியாது.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று தெரிந்ததும், மறுநாளே அதாவது, நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினோம். அடுத்ததாக, நாளை தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிறது. மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்ற போகிறோம்.

நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை பல போராட்டங்களுக்கு பிறகு மீட்டு, சில பத்தாண்டுகளாகத்தான் பலரும் படிக்க தொடங்கியிருக்கிறார்கள். படித்தால் தானாக தகுதி வந்து வாழ்க்கையில் முன்னேறிவிடுவார்கள். ஆனால், படிப்பதற்கே உனக்கு தகுதி வேண்டும் என்று தடுக்கும் பழைய சூழ்ச்சியின் புது வடிவம்தான் இந்த நீட்.

அதனால்தான் நாம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம். மருத்துவப் படிப்புகளில் சேர்வதாலேயே யாரும் மருத்துவர் ஆகிவிட மாட்டார்கள். மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி அடைந்தால்தான் டாக்டர் ஆவார்கள். அப்படித்தான் உலகின் தலைசிறந்த டாக்டர்களாக நமது தமிழ்நாட்டு டாக்டர்கள் இருக்கிறார்கள். நீட் தேர்வை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. அதன் முகமூடியைக் கழற்றி பார்க்க வேண்டும்.

மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே, ‘நீட்’ தேர்வை வைத்துதான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இதோ இப்போது நாம் துணிச்சலோடு, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். நீட் எதிர்ப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.