கூடுதல் விலைக்கு மது விற்பனை… 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்..!

சென்னை: நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழகம் முழுவதும் 852 டாஸ்மாக் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அவ்வப்போது மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பெரும்பாலான கடைகளில் இந்த நிலைதான் இருப்பதாகவும் அரசு நிர்ணயித்த நேரத்தை கடந்து விற்பனை செய்வது பார்களுடன் இணைந்து அதிக விலை வாங்குவது என சில முறைகேடுகள் நடப்பதாக மதுப்பிரியர்கள் அவ்வப்போது வேதனை தெரிவிப்பது உண்டு.

குறிப்பாக மதுபாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மதுக்கடைகள் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் மதுப்பிரியர்கள் இது தொடர்பாக அரசு கண்டுகொள்வதில்லை எனவும் ஆதங்கப்பட்டுக்கொள்கின்றனர்.

கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துளது. இருந்தாலும் சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் நிகழ்வுகள் குறைந்தபாடில்லை என்பதே மதுப்பிரியர்கள் வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் ஒருபக்கம் டாஸ்மாக் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான 852 டாஸ்மாக் ஊழியர்களை இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு மட்டும் இல்லாமல், விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ.4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைகேடுக்கு துணைபோனதாக 1,970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக பார் நடத்தியதாக 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வரவேற்புக்குரியது என்று சொல்லும் மதுப்பிரியர்கள், இந்த விவகாரத்தில் இன்னும் தீவிரமான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அப்போதுதான், மதுபானங்களை நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் போக்கு குறையும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.